Fri, Aug 28, 2026 11:59 AM

திருப்பத்தூரில் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து

Posted by admin on 29-06-2026


திருப்பத்தூரில் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து

திருப்பத்தூரில் மின்கம்பத்தில் திடீர் தீ விபத்து – தீயணைப்புத் துறையினரின் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள உயர் மின்கம்பத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது. தீயணைப்புத் துறையினரின் விரைவான நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே பட்டமங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ள நாகப்பா மருதப்பா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகேயுள்ள உயர் மின்கம்பத்தில், அவசரகால பயன்பாட்டிற்காக (டம்மியாக) பொருத்தப்பட்டிருந்த மின்கம்பி, எதிர்பாராத விதமாக மின்சாரம் செல்லும் மின்கம்பியில் உரசியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக திடீரென மின்கம்பத்தில் தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கியது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மின்வாரியம் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் மின்விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்புப் படையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளதுடன், அதிகளவில் வாகனங்கள் செல்லும் பிரதான சாலையாகவும் இருப்பதால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் இருந்தது. இருப்பினும், மின்வாரியம் மற்றும் தீயணைப்புத் துறையினரின் விரைவான நடவடிக்கையால் எந்தவித பாதிப்பும் இன்றி நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தொடர்ந்து பழுதுகள் சரிசெய்யப்பட்டு மின்விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Share: 1,904 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.