Fri, Aug 28, 2026 11:59 AM

அணைக்கரைப்பட்டி பாலாற்றில் கழுத்து வரை மண்ணில் புதைந்து விவசாயிகள் போராட்டம்

Posted by admin on 25-06-2026


அணைக்கரைப்பட்டி பாலாற்றில் கழுத்து வரை மண்ணில் புதைந்து விவசாயிகள் போராட்டம்

பாலாறு தடுப்பணை எதிர்ப்பு. கழுத்து வரை மண்ணில் புதைந்து விவசாயிகள் போராட்டம்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அணைக்கரைப்பட்டி பாலாற்றில், மதுரை மாவட்டம் சூரப்பட்டி பகுதியில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி விவசாயிகள் கழுத்து வரை மண்ணில் புதைந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் கரந்தமலை பகுதியில் உற்பத்தியாகும் பாலாறு மூலம் சுமார் 650 கண்மாய்கள் நிரம்பி, ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில், சூரப்பட்டி பகுதியில் ரூ.9 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை கட்டப்பட்டு வருவதால், சிங்கம்புணரி, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களின் விவசாயம் பாதிக்கப்படும் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஏற்கனவே பேரணி, கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்திய நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் இரண்டாம் கட்டமாக ஏழு விவசாயிகள் பாலாற்றில் கழுத்து வரை மண்ணில் புதைந்து போராட்டம் நடத்தினர்.

இந்த தடுப்பணையால் 650-க்கும் மேற்பட்ட கண்மாய்களின் நீர்வரத்து பாதிக்கப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் எச்சரித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிங்கம்புணரி காவல்துறையினர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தீவிரமடைந்து வரும் போராட்டத்தால் மாவட்ட நிர்வாகம் விரைந்து தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Share: 1,463 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.