Fri, Aug 28, 2026 11:05 AM

எழுவன்கோட்டை கொல்லங் கண்மாயில் மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியனின் தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு

Posted by admin on 15-06-2026


எழுவன்கோட்டை கொல்லங் கண்மாயில் மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியனின் தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், எழுவன்கோட்டை கொல்லங் கண்மாயில் மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியனின் தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு . 
          சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், எழுவன்கோட்டை கொல்லங் கண்மாயில்  ஒரு கல்வெட்டு இருப்பதாக இருப்பதாக ஆறாவயல் பெரியய்யா மற்றும் எழுவன்கோட்டையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் செல்லம் ஆகியோர் தெரிவித்த தகவலின் பேரில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியர் முனைவர் வேலாயுதராஜா மற்றும் புதுக்கோட்டை தொல்லியல் கழகத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் களஆய்வு மேற்கொண்டு அவ்விரு கல்வெட்டுக்களை படியெடுத்தனர். கல்வெட்டுக்களில் உள்ள செய்தி குறித்து அவர்கள் தெரிவித்தாவது, இங்கு காணப்படும் கல்வெட்டு ஐந்து அடி உயரத்தில் உள்ளது. இதில் நான்கு பக்கங்களிலும் சேர்த்து மொத்தம் 78 வரிகளில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியனின் இக்கல்வெட்டு கோனேரின்மை கொண்டான் ஆணை என்று துவங்குகிறது.
கல்வெட்டுக்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சதுர்வேதிமங்கலம், அரண்மனைச் சிறுவயல், கம்பனூர், ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. இக்கல்வெட்டு வீரபாண்டியனின் ஏழாம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது எனக் குறிப்பிடுகிறது. வீரபாண்டியனின் இதே ஆட்சியாண்டைச் சேர்ந்த மற்றொரு கல்வெட்டு திருப்புத்தூர் வட்டம், பெரிச்சி கோயிலில் உள்ள சுகந்தவனேஸ்வரர் கோயிலிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
இங்கு காணப்படும் கல்வெட்டு, பொது ஆண்டு 1296முதல் பொது ஆண்டு1342 வரை பாண்டிய நாட்டை ஆண்ட மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியனின் கல்வெட்டாகும். இம்மன்னன் தன் ஆட்சிக்காலத்தில் 1311 இல் மாலிக்காபூர் படையெடுப்பின் போதும்,1318 இல் குஸ்ருகான் 1323 இல் முகமது பின் துக்ளக் ஆகியோரின் படையெடுப்பின்போதும் மதுரையைத் தவிர்த்து திருநெல்வேலி, திருச்சி, இராமநாதபுரம்  பகுதிகளில் இருந்து ஆட்சி புரிந்துள்ளார்.
இக்கல்வெட்டு, வீரபாண்டியன் இரவிசேரி பற்று நாட்டார்க்கு,  தை மாதம் முதல் மார்கழி வரை ஆண்டு ஒன்றுக்கு பல உபாதிகள் (வரிகள்) உட்பட புதுப்பொன் ஆயிரத்துக்குப் பதினாயிரம் பணமாக, மாதவிழுக்காட்டிலே நிச்சயித்த செய்தியைக் கூறுகிறது.  கார்த்திகை மாதத்தில் அரச ஆணை கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டிருப்பதால் தை மாதம் முதல் மார்கழி வரை என வரியாக நிச்சயித்துக்கூறப்பட்டிருக்கிறது. மேலும் இக்கல்வெட்டை வெட்டிய பொன்பாதிஉடையான், சுந்தரபாண்டிய காலிங்கராயன் ஆகிய அதிகாரிகளின் பெயர்களும் காணப்படுகின்றன. வீரபாண்டியனின் பெரிச்சி கோயில் கல்வெட்டிலும் அதிகாரியான காலிங்கராயனின் பெயர் காணப்படுவது குறிப்பிடத்தக்கது

Share: 1,091 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.