Fri, Aug 28, 2026 10:02 AM

இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் திருத்தலத்தில் பெருவிழா

Posted by Admin on 04-07-2026


இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் திருத்தலத்தில் பெருவிழா

இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் சர்ச்சில் மின் அலங்கார தேர்பவனி; ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் அமைந்துள்ள திரு இருதய ஆண்டவர் சர்ச்சில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா, இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்றது. விழா, 'நம் வாழ்வு' முதன்மை ஆசிரியர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற திருப்பலியில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். விழா நாட்களில் தினமும் மாலை சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான திரு இருதய பெருவிழா நடைபெற்றது. இதில் சிவகங்கை மறைமாவட்ட ஆயர் ஆனந்தம், பாதிரியார் சேசுதாஸ், பேராசிரியர் இம்மானுவேல்தாசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற திருவிழா திருப்பலியில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

திருப்பலி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சர்ச் முன்பாக மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் இயேசுவின் திருஉருவம் வைக்கப்பட்டு, இடைக்காட்டூரின் முக்கிய வீதிகள் வழியாக தேர்பவனி நடைபெற்றது. தேர் புறப்படுவதற்கு முன்பு வானவேடிக்கை மற்றும் மேளதாள நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தேர்பவனியின்போது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் மாலை அணிவித்து பிரார்த்தனை செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் ஜான் வசந்தகுமார், 'நம் வாழ்வு' துணை ஆசிரியர் பிரின்ஸ், மரியின் ஊழியர் சபை சகோதரிகள், இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம், செல்ஸ் இளைஞர் பேரவை, திரு இருதய பக்தர்கள் மற்றும் பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.

Share: 986 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.